Sunday, July 28, 2019

ஶ்ரீரங்கமஹாகுரு - 13 (Sriranga Mahaguru - 13)

 ஸ்ரீ குருவின் கண்ணோட்டம் - 2
-------------------------------------

 சித்ரகுப்தரின் ரகசியம்



“புண்யம் பாவமென்பதெல்லாம் வீண் வெட்டி பேச்சு. எங்கே உள்ளது பாவமும் புண்யமும்? மாடு, புலி வருகிறதென்றால் கண்ணுக்கு புலப்படும். பாவ புண்யங்களை பார்த்தவர் யார்? இந்த எண்ணங்களை எல்லாம் விட்டு மனதிற்கு தோன்றியபடி நடக்க வேண்டும்” என ஓர் இளைஞன் தன் பாட்டிக்கு உபதேசித்தான்.
    
 “பாவம் புண்யம் இல்லாமல் போகாது. நமக்கு காண கிடைக்காவிடினும் சித்ரகுப்தர் எல்லாவற்றையும் ரகசியமாக எழுதிக் கொள்வாரென உன் தாத்தா சொல்வார்” பாட்டி அனாயாசமாக பதில் கூறினாள்.

             இளைஞன் சிரித்து சித்ரகுப்தர் யாரென வினவ “அவர் யமதர்ம ராஜனின் குமாஸ்தா” என பதிலுரைத்தாள். “யார் கண்ணுக்கும் காணாதவர் தாத்தா கண்ணுக்கு மட்டும் தென்பட்டாரா என்ன? எப்படி நம்புவது?” என்று வினவினான் இளைஞன்.

           இந்த உரையாடலை  வித்வாம்சரும், மனம் சார்ந்த சாஸ்திரத்தில் பெரும் பண்டிதரும், நல்ல விமர்சகருமான ஒருவர் கேட்டுக்கொண்டிருந்தார். ஆன்மீகத் துறையிலும் பரிசோதனை செய்து ப்ரஹ்மஞானியான மஹா குருவிடம் சேவை செய்தவருமாவார். அவர் அந்த இளைஞனை குறித்து “`நாம் நம்பினாலும் நம்பாவிடினும் பாவ புண்யங்கள் உண்டப்பா. சித்ரகுப்தர் எழுதிக் கொள்வதும் உண்மை. சாதாரண மனிதர்கள் அதை சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவ்வளவுதான்.” என்றார்.

           மேலும் “நீ யாரும் அறியாமல் ஏதாவது தீய செயல் அல்லது நல்ல செயல் செய்தால் உனக்கு அது தெரிகிறதா இல்லையா?” என வினவினார். இளைஞன் “தெரிகிறது சார்” என பதிலுரைக்க “அச்செயல்களின் அடையாளம் உன் மனதில் ஏற்படுகின்றதா இல்லையா? அதாவது அச்செயல்கள் தம்முடைய முத்திரையை உன் மனதில் சித்திரிகின்றனவா?” என வினவினார். “ஏற்படுகிறது சார்” என இளைஞன் கூற “அவ்வாறு அடுத்தவர் அறியாமல் நம் மனதில்
ரகசியமாக(குப்தமாக) சித்தரிக்கும் சக்தியே சித்ரகுப்தர். அவரை நம்பாமல் இருக்க முடியுமா?அவர் எழுதிக்கொள்வதில் நல்ல செயல்களின் கணக்கே புண்ணியம் எனவும் தீயவையின் கணக்கு பாவம் எனவும் அறிய வேண்டுமப்பா” என்றார்.

       நன்றாக புரியும் மொழியில், நம்பிக்கை உண்டாகும் விதமாக உண்மையை விளக்கிய அந்த ஆசானுக்கு நன்றியுடன் தன் வணக்கங்களையும் தெரிவித்தான் அவ்விளைஞன்.