Friday, July 12, 2019

ஶ்ரீரங்கமஹாகுரு - 23 (Srirangamahaguru - 23)

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 12
(மூலம்: திரு. வரததேசிகாசார்யார் தமிழாக்கம் : திருமதி வனஜா)



உபநிடதம் கூறும் உப்பின்  பரிசோதனை

'இறைவனிடம் ஈடுபாடு வை. பக்தியுடன் அவனை வழிபடு' என்று ஆசிரியரான உத்தாலகர்  பொங்கி வரும் அன்புடன் தம் ப்ரியமாணவன் சிறுவன் ச்வேதகேதுவிற்கு உபதேசித்தார். 
ச்வேதகேதுவிற்கு ஆசிரியரிடம் அளவற்ற பக்தி இருந்தது.
அவருடைய அன்பு அவன் இதயத்தை கவர்ந்திருந்தது. அவர் மிகவும் நேர்மையானவர் என்று அவன் உள்மனம் கூறும். ஆயினும் மிக்க அறிவாளியான சீடன் ஆராயாது எதனையும் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை.
“இறைவன் கண்ணிற்கு புலப்படுவதில்லையே, அவனிடம் எவ்வாறு பற்று வைப்பது?” என்று பணிவுடன் வினவினான்.
குரு சிறிது நேர அமைதிக்குப்பின் அவன் கையில் ஒரு பிடி உப்பை அளித்து 'நீர் நிரம்பிய  கிண்ணத்தில் போட்டு நாளை காலையில் கொண்டு வா' என்று பணித்தார். சீடன் பணிவுடன் அவ்வாறே செய்தான்.
ஆசிரியர்: நேற்று மாலை இதில் சேர்த்த உப்பை எடுத்து கொடு.
சீடன் நீரை   தொட்டு பார்த்தபோது உப்பு கைக்கு கிடைக்கவில்லை. கண்ணிற்கும் புலப்படவில்லை.     
ச்வேதகேது: அந்த உப்பு  இங்கு கிடைக்கவில்லை.            
ஆசிரியர்: இல்லையா? அப்படியாயின் அந்த நீரின்  இந்த பக்கத்திலிருந்து சிறிதளவு பருகு.
சீடன்: பருகினேன்.                   
ஆசிரியர்: எவ்வாறு உள்ளது?                
சீடன்: மிகவும் உப்பு கரிக்கிறது.            
ஆசிரியர்: நீரின் நடு பாகத்திலிருந்து பருகு.                        
சீடன்: பருகினேன். மிகவும் உப்பாக உள்ளது.                     
ஆசிரியர்: கடைசி பாகத்திலிருந்து பருகு.                      
சீடன்: பருகினேன்! அதுவும் அவ்வாறே உப்பாக உள்ளது.
ஆசிரியர்: அந்த உப்பு கண்ணிற்கு புலப்படவில்லை. கைக்கு கிடைக்கவில்லை. ஆயினும் அது இந்த நீரில் முழுமையாக  கலந்திருப்பது உன் நாவிற்கு உரைக்கிறதல்லவா? அவ்வாறே இறைவன் கண்ணிற்கு புலப்படாவிடினும் உண்மையாகவே இருக்கின்றான். எங்கும் நிறைந்திருக்கின்றான். அகக்கண்ணிற்கு தெளிவாக புலப்படுவான். அந்த  மெய்யுணர்வை அடைய தவம் செய்ய வேண்டும்.
இந்த சிறிய பரிசோதனை  சிறுவனான ச்வேதகேதுவின் மனதில் ஆழமாக பதிந்தது. குருவை வணங்கி அவன் அன்றிலிருந்தே  அதற்கான முயற்சியை தொடங்கினான்.