Saturday, July 13, 2019

ஶ்ரீரங்கமஹாகுரு - 24 (Srirangamahaguru - 24)

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 13
(மூலம்: திரு. வரததேசிகாசார்யார் தமிழாக்கம் : திருமதி ஜானகி)



ஒளி(ஜோதி)
        “நீ எத்தனை விதமான ஒளிகளை காண்கிறாய் குழந்தாய்?” மஹா குரு சீடனை வினவினார்.
              "பகலில் சூரியனையும், இரவில் விளக்கின் ஒளி, வானில் நிலவு மற்றும் நட்சத்திர ஒளியை காண்கிறோம். இத்தகைய ஒளிகள்தானே உள்ளன?" சீடன் சுலபமாக பதிலுரைத்தான்.
      ஶ்ரீகுரு: “சூரிய-சந்திர-நட்சத்திர ஒளிகளை காண மீண்டும் எந்த வெளிச்சம் தேவை?”   அறிவாளியான சீடன் சிறிது யோசித்து “கண்களின் ஒளி இன்றி அவைகளை காண இயலாது” என பதிலளித்தான்.
        “கண்களுக்கு ஒளி எங்கிருந்து வருகிறது?” என்றார் ஶ்ரீகுரு.
        உடனே பதில் அளிக்க தோன்றாத சீடனுக்கு உதவும் வகையில் ஶ்ரீகுருவே மற்றொரு கேள்வியை கேட்டார்.
            “தூங்கும் போது சில நேரம் நீ கனவுகளை காண்கிறாய். அப்போது கண்களை மூடியிருந்தும் சில காட்சிகளை காண்கிறாய். அச்சமயம் அவைகளை எவ்வாறு காண்கிறாய்?”
              “அது மனதிற்கு காண்கிறது” என சீடன் உரைத்தான்.
          "அவ்வாறாயின் கண்ணிற்கு ஒளி எது?"
            "மனம்தான்"
      "அம்மனதிற்கும் ஒளி எங்கிருந்து வருகிறது?"
        "அது தெரியாது"
      ஶ்ரீகுரு:  ”மனது மற்றும் புத்திக்கு ஒளி உண்டாவது பரம்பொருளிடமிருந்துதான். அவைகளை இயக்கும் அச்சோதியை   உன்னதமான காயத்திரி மந்திரம் துதிக்கிறது. அனைத்து ஒளிகளுக்கும் முதன்மையான ஜோதி. பரம்சுடர். பரமாத்ம ஜோதி. அது நம் ஸ்வரூபம் என ஆதி சங்கரர் கொண்டாடுகிறார். அதையே நம் அனைவரின் தலைவன் என ஆழ்வார்கள், அடியார்கள், பக்தர்கள் மற்றும் ஶ்ரீராமானுஜர், ஶ்ரீமத்வாசார்யர்  முதலிய பக்தி மார்க ஆசார்யர்கள் வழிபடுகின்றனர்” என ஶ்ரீகுரு விளக்கமளித்தார்.