Thursday, July 18, 2019

ஶ்ரீரங்கமஹாகுரு - 27 (Srirangamahaguru - 27)

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 16
(மூலம்: திரு. வரததேசிகாசார்யார் தமிழாக்கம் : திருமதி ஜானகி)


பெரியவனுக்கு சிறிய உறைவிடம் ஏன்?

        இறைவனுக்கென்றே உருவாக்கப்பட்ட ஆலயத்தில் மற்றெல்லா  இடங்களும்  விரிந்து பரந்திருந்தாலும், ஆண்டவன்  உறையும் கருவறையே மிகவும் சிறிது. அங்கு ஒளிர்விடும் சிறிய தீபத்தை தவிர வேறு வெளிச்சத்திற்கு வழியில்லை. தற்போதைய மின்சார விளக்குகளை பயன்படுத்துவதற்கு  பாரம்பர்யத்தில் ஊறியவர்கள் விரோதம் தெரிவிப்பதையும் கேள்விப்படுகிறோம்.

         அனைவரும் இறைவனை காண ஆவலுடன் ஓடிவரும் அறையே ஏன் சிறியது? அது விசாலமாகவும் இருந்து அதிகஒளியும் புகுந்தால் நலந்தானே? ஏன் இருட்டு குகையில் மிளிரும் தீபத்தைப்போன்றதோர்  சிறிய தீபம்  ஒளிரவேண்டும்? அதற்கு ‘கருவறை’ எனும் பெயர்தான் ஏன்? எனும் வினாக்கள் எழுவது இயல்பு.

          ஓர் ஜீவனின் உற்பத்தி ஏற்படுவது தாயின் கருவறையில் என்பதை நாம் மறக்கக்கூடாது. "தாயின் கர்ப்பத்தில் இருக்கும்பொழுது குழந்தை தன் எட்டாவது மாதத்தில் இறைவனை தரிசிக்கிறது.  அக்காட்சியை கண்டு பேரானந்தத்தில் திளைக்கும் அந்த ஜீவன் தான் கர்ப்பத்திலிருந்து வெளியே வந்த பிறகு அஜ்ஜோதியை மறவாமல் வாழ்வதாக உறுதி கொள்கிறது" என்று ஞானிகள் கூறுகின்றனர். ஆயினும் தாயின் கருவறையிலிருந்து வெளிவந்த பிறகு சிசு வெளி உலகத்தின் ஈர்ப்புக்கு உட்பட்டு தன் உறுதி மொழியை மறந்துவிடுகிறது.

         மீண்டும் அந்த ஜீவனுக்கு கருவறையில் கண்ட அச்சோதியை நினைவூட்டி அதன் வாழ்வில் பேரானந்தத்தையும், பரம சாந்தியையும் வழங்குவதே ஆலய நிர்மாணத்தின் பின் அடங்கியுள்ள  திட்டம். ஆகவேதான் ஆண்டவனை நிலைநிறுத்தும் இடத்திற்கும் ’கருவறை’ எனும் பெயர் வழங்கிவருகிறது. ஜீவன் முதன்முதலில் இறைவனை கண்ட இடம். அங்கு வெளியிலிருந்து எந்த ஒளியும் நுழைய முடியாததால் அது வெளி ஒளியிலிருந்து தனிப்படுத்தி  அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கண்ட ஜோதியின் நினைவிற்காக சிறு தீபம்; மற்றும் அந்த ஞானத்தினிடம் நம்மை ஈர்க்கும் அடையாளங்களை கொண்ட  இறைஉருவம். அவ்வாறே கருப்பை சிறிதாகவும், மறைந்தும் இருப்பதால் கருவறையும் சிறியது. ஜீவன் முதன் முதலில் ஜோதியை கண்ட இடம் கருப்பை என்பதால் ஜீவனை அச்சூழ்நிலைக்கே கொண்டு சென்று மீண்டும் அத்தரிசனத்தை  காட்டுவதற்காகவே  ஆலயத்திலும் ஒரு கருவறை அல்லது கர்ப்பக்ருஹம்.