Sunday, October 27, 2019

ஶ்ரீரங்கமஹாகுரு - 39 (Sriranga Mahaguru - 39)

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 28
கலைபடைபிற்கு மேலும் மெருகேற்றுதல் தேவையா?
===========================================================
மூலம்: ஸ்ரீ வரத தேசிகாசார்யார்
தமிழாக்கம் : திருமதி வனஜா




“சிற்பி செதுக்கும் இறைவடிவமே ரசிகனின் மனதை கொள்ளை கொள்கிறது. அவனில் மகிழ்ச்சியை நிரப்புகிறது. இவ்வாறிருக்கையில் புரோகிதர்கள் அதற்கு மந்திர-தந்திர சடங்குகள் செய்வது ஏன்? இச்சடங்குகள் இல்லை எனினும் மக்கள் அதன் இயற்கை அழகை ரசிக்கலாமல்லவா?”

 “சிற்பியும் கல்லை செதுக்கி அதற்கு இறைவடிவை ஏன் அளிக்க வேண்டும்? கல் கல்லாகவே  இருந்தாலும் அதன் இயல்பான நிறம் மற்றும் உருவத்தில் மக்கள் அதனை ரசிக்க இயலாதா?”

 “அவ்வாறில்லை.  சிற்பி அதை சிறப்பாக செதுக்கி அதனில் கலை அழகை ஏற்படுத்துகிறான். அதனை காண்கையில் மக்களின் மனது மகிழ்ச்சியில் புல்லரிக்கின்றது. எனவே சிற்பியை அவன் படைப்பிற்காக பாராட்டுகிறோம்”

  “அவ்வாறே ஞானிகளும் தங்கள் தவத்தின் பலனால் கல்லினால் உண்டான அந்த  உருவத்திற்கு  இறைதன்மையை அளிக்கின்றனர். அதற்கு உயிரூட்டுகின்றனர். இறைஅழகு நிரம்பும்படி செய்கின்றனர். அதனை தரிசித்து பூஜிக்கையில் மக்களின் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கின்றது. எனவே தவத்தில் சிறந்த ஞானிகளை நாம் நன்றியுடன் கௌரவிக்கின்றோம்.

  “இறைவனின் சிற்பத்தை காணும் அனைவருக்குமே இறைவனுடன் ஒன்றிடும் மகிழ்ச்சி ஏற்படுவதில்லையே?”

 “இறையுருவில் உள்ள கலையழகை ரசித்துமகிழாத மக்களும் இருக்கின்றார்கள் அல்லவா?”

 “அவர்கள் ரசிக தன்மையற்ற அறிவிலிகள். எனவே சிற்பகலை அவர்களில் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்துவதில்லை”.

   “அவ்வாறே இறையுருவை கண்டு மகிழாதவர் பக்தி உணர்வற்ற பாமரர்கள் என்று அறிந்தவர்கள் கூறுவர். ஈடுபாடும், பக்தியும் கலையின்பால் உள்ள விருப்பத்தை போன்றே சிறப்பானது. இவ்விரண்டிற்கும் தூய்மையான மனமும் ரசிக்கும் தன்மையும் தேவை.