Tuesday, November 5, 2019

ஶ்ரீரங்கமஹாகுரு - 42 (Sriranga Mahaguru - 42)

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 31

நம்பிக்கை இல்லாவிடில் கேடு

===========================================================

மூலம்: வரததேசிகாசார்யார் தமிழாக்கம்: வனஜா


           இறைவன் உண்டு என்பதையே சிலர் நம்புவதில்லை. மற்றும் சிலர் இறைவனை கண்டபடி தூற்றுகின்றனர். இறைவனை குறித்து கிண்டலும் கேலியும் செய்கின்றனர்.

           இறைவன் ஒருவன் இருந்தால், அவனுக்கு மானம், மரியாதை இருந்தால் மேற்சொன்ன மக்களுக்கு  கடுமையான தண்டனை வழங்கி இருக்க வேண்டும். ஆயின் அவ்வாறு எதுவும் காணப்படவில்லை. எனவே இறைவன் இல்லை. இருப்பினும் அவனுக்கு மானம், மரியாதைகளில்லை என்னும் கருத்தை Bertrand Russel என்னும் விமர்சகர் கூறுகின்றார். அவரின் கூற்று மேலோட்டமாக காணும்போது சரியெனவே தோன்றுகிறது.

          ஆயின் இறைவனை யார் நம்புவதில்லையோ அல்லது யார் அவரை தூற்றுகின்றனரோ அத்தகையோருக்கு இறைவன் கடுமையான தண்டனையை அளித்திருக்கின்றான். அறியாமையே அக்கொடிய தண்டனை. இறைவன் உண்மையாக உள்ள சைதன்யஸ்வரூபி. ஒவ்வொருவனும் ஞானம், ஆனந்தம், அழியாத்தன்மை, அமைதி, முதலிய செல்வங்களை அடைய இயற்கையாகவே உரிமை உள்ளவன். இவற்றை நம்பாதவர்கள் தங்களின் அச்செல்வத்தை அடைய முயல்வதேயில்லை. அவர்கள் செல்வமற்ற தரித்திரராகவே ஆகின்றனர். தமக்கு இயல்பாகவே சுதந்திரம், அறிவு, மகிழ்ச்சி முதலியவை  உள்ளன  என்பதை நம்புவதில்லை. அதனை அடைய முயல்வதுமில்லை.

சிறையில் இருந்தபடி அங்குள்ள துன்பங்களை அநுபவித்துக் கொண்டு, அங்கு கிடைக்கும் சிறிதளவு உணவையே உட்கொண்டு, அந்த சிற்றின்பத்தை  அடைவதே தம் இயல்பு,  இதற்கு மேலான இன்பமே இல்லை என கருதுகின்றனர். இந்த சிறையில் சிலருக்கு தங்கத்தாலான கைவிலங்கு. சிலருக்கு இரும்பினாலான கைவிலங்கு. இதில் நான் பெரியவனா நீ பெரியவனா என்னும் போட்டி வேறு! இவையெல்லாம் அறியாமையின் பலன்கள். கடும்தண்டனை. தமக்கு பெரிய தண்டனை கிடைத்துள்ளது என்றே உணராத அறிவிலிகள் அவர்கள். பரிதாபத்திற்குறியவர்கள், பாமரர்கள். இந்த தண்டனையிலிருந்து தப்ப வேண்டுமெனில் தங்கள் உண்மை நிலையின் அறிவை அடைய வேண்டும். அதற்காக இறைவனிடம் நம்பிக்கை வேண்டும். இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டும். இதுவன்றோ  சரியான பாதை.