Thursday, November 21, 2019

ஶ்ரீரங்கமஹாகுரு - 45 (Sriranga Mahaguru - 45)

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 34

இறைவனின் படைப்பு எவ்வாறு (லீலை)விளையாட்டாகும்?
===========================================================

மூலம்: வரததேசிகாசார்யார் தமிழாக்கம்: வனஜா


ஆசார்யபாதராயணர் பிரம்ம ஞானிகளில் முதன்மையானவர். சிறந்த பக்தர். மற்றும் மேதாவியான சிறந்த ஆசான். அவருடைய  சமயோசிதமான உபதேசங்களால் சீடர்களில் சிறந்தவரான ஜைமினி முனிவரின் உள்ளத்திருந்த அநேக ஐயங்கள் நீங்கியிருந்தன. அதிலும் ’இறைவன் எல்லோரிடத்தும் சமமானவன், பாகுபாடற்றவன், கருணையே  உருவானவன்’ என்பது குறித்த ஐயம் நீங்கி மிகவும் அமைதி பெற்றார். இறைவன் உயிர்களுக்கு உடலை அளித்து அவைகளை காத்து முடிவில்  தன்னுடன் ஐக்கியப்படுத்தி கொள்வதும்கூட அவனின் கருணையின் விரிவாக்கமே என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். ஆயின் படைப்பை பற்றிய ஒரு பெரிய வினா அவரது மனதை அரித்துக்கொண்டிருந்தது. அதனை அவர் தம் குருவின் முன்னிட்டார்.

ஜைமினி: படைத்தல், காத்தல், அழித்தல் என்பது இறைவனின் பொம்மையாட்டம் போன்றது  என கற்றறிந்த சிலர் கூறுகின்றனர். இதுசரியா? சரியென்றால் "பூனைக்கு கொண்டாட்டம், எலிக்கு திண்டாட்டம்" என்பது போன்ற  இத்தகைய விளையாட்டை அவன் ஏன் ஆட வேண்டும்? இவ்வாறு செய்பவன் இரக்கமற்றவன் மட்டுமன்றி அச்சமூட்டும் ப்ரபுவுமல்லவா? இத்தகையவனை கருணை உள்ளவன் என்று எவ்வாறு  அழைப்பது?

பாதராயணர்: படைப்பு முதலானவை அவனது விளையாட்டு என்று சான்றோர் உரைக்கின்றனர். இங்கு விளையாட்டென்றால் அனைவரையும் துன்புறுத்தும் விளையாட்டல்ல. எல்லாம் அடைந்துள்ள இறைவனுக்கு விளையாடும் ஒரு ஆசை மட்டும் மீதமுள்ளதோ? அவ்வாறு ஆடுவதாயினும்  உயிரினங்களை  துன்புறுத்தும் விளையாட்டையா இரக்கம்மிக்க  இறைவன் ஆடுவான்? 
            அவ்வாறெனில் அவன் விளையாட்டென்பது என்ன? உலகில் விளையாட்டென்பது கடினமானதல்ல. மிகுந்த மகிழ்ச்சியுடன் சிரமமின்றி மக்கள் உலகில் விளையாடுகின்றனர். அவ்வாறே படைப்பு முதலியவற்றை  அவன் எந்த சிரமமுமின்றி  எளிதாக,  தான் நினைத்த மாத்திரத்தில்  நிறைவேற்றுகிறான்.  இதுவே அவன் இயல்பாகவும் உள்ளது. இதையே அவன் (லீலை)விளையாட்டென்று அழைக்கிறோம்.

                         (அடுத்த வியாழனன்று தொடரும்)