Thursday, December 19, 2019

ஶ்ரீரங்கமஹாகுரு - 49 (Sriranga Mahaguru - 49)

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 38

உறைவிடம் எங்கோதேடுதல் எங்கோ !
===========================================================
மூலம்: வரததேசிகாசார்யர் 
தமிழாக்கம்: ஜானகி



"நாம் விண்வெளியில் புகுந்தோம், சந்திரமண்டலத்தில் கால் பதித்தோம்: ஆனால் எங்கேயும் எந்த கடவுளும் நம் கண்ணுக்கு புலப்படவில்லை. இவ்வாறு எங்கும் இல்லாது யாருடைய கண்ணிற்கும் புலப்படாது உள்ள கற்பனைக் கடவுளை ஏன் பூஜிக்க வேண்டும்?  அதற்கு மாறாக கண்கூடாக காணும் மானுட உருவில் உள்ள மனித-கடவுளை பூஜிக்கலாம் வாருங்கள்" என ஒருவர் கூறினார்.

              மானுடருக்கு உதவுதல் எனும் இவருடைய விருப்பம் சரியானதே. ஆனால் கடவுளை பற்றி இவருடைய கருத்து  மட்டும் ஆழமானதாக இல்லை.

              'விண்வெளியில் புகுந்தால் அல்லது சந்திரமண்டலத்தில் கால் பதித்தால் அங்கு கடவுள் காணப்படுவான், அதுவே அவனின் உறைவிடம்' என்று எந்த ஞானியும் கூறியதில்லை. எந்த உயர்ந்த நூல்களிலும் அவ்வாறு கூறப்படவில்லை.

             "கஸ்தூரி மான் தன்னுடைய நாபியிலேயே (கொப்பூழ்) உள்ள கஸ்தூரியின் (ஒரு வித வாசனை திரவியம்) நறுமணத்தை தான் நடமாடும் இடமெல்லாம் பரப்புகிறது. ஆனால் 'எங்கிருந்தோ இம்மணம் வீசுகிறதே!' என அந்த முட்டாள் மிருகம் அதன் இருப்பிடத்தை அறியாது கண்ட செடி, மரங்களை முகர்ந்து காட்டில் அலைந்து திரிகிறது. அவ்வாறே  தனக்குள்ளேயே ஞானக் கண்களால் இறைவனை அறியாது புலன்களின் வெளிப்புறம் தேடித் திரிகிறான் மூர்க்க மனிதன்" என்கிறார் மஹான்  கபீர்.

            ‌'மலரில் நறுமணம் போல், கனியில் ரசம் போல் ஆன்மாவினுள் உறைகிறான் (ஆத்ம நாராயணன்) இறைவன். புலன்களை கட்டுக்குள் வைத்து அகக்கண்களினால் அவனை கண்டுகளிக்க வேண்டும் என உபதேசிக்கிறார்கள் பாகவதர்கள். 'புலன்களை உள்நோக்கி திருப்பினால் மட்டுமே ஆன்மாவினுள் உறைபவனின் தரிசனம் தீரனுக்கு' என்கிறது உபநிடதம்.

                இவ்வாறு எதையும் கவனியாமல் இறைவனின் இருப்பைப் பற்றி கூறுவது சரியல்ல. அகக்கண்களுக்கு மட்டுமே புலப்படும் (பரம்)பொருளை புறக்கண்களால் தேடி காணாமல் அப்பொருளே இல்லை என அறுதியிட்டு கூறுவது உண்மைக்கு நீதியன்று.

                                 (அடுத்த வியாழனன்று தொடரும்)