Sunday, January 5, 2020

ஶ்ரீரங்கமஹாகுரு - 51 (Sriranga Mahaguru - 51)

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 40

சோம்பேறித்தனமே பெரும் எதிரி
===========================================================


மூலம்: வரததேசிகாசார்யர் 
தமிழாக்கம்: ஜானகி



 ‘ இந்த பஜனை, இறைவழிபாடு, ஜபமணி எண்ணுதலை விட்டு விடு. இருண்ட மூலையில் ஒருவனே அமர்ந்து யாரை பூஜிக்கிறாய்? கண்களை திறந்து பார். கடவுள் உன்னெதிரில் இல்லை. அவன் கல் உடைப்பவனிடமும், உழவன் உழுமிடத்திலும்  உள்ளான்’ எனும் பொருள் கொண்ட  கவிதை  ஒன்றுண்டு. இது நமக்கு பல பாடங்களை கற்பிக்கிறது.

     நற்பயனையளிக்கும் தொழில் எந்த துறையிலாயினும் அது போற்றத்தக்கதே. உடலை வருத்தி செய்யும் பணியை அற்பமாக கொள்ளலாகாது. உழைப்பாளியின்பால் கருணை காட்டி ஆதரித்தல் வேண்டும்.

உழைப்பின்றி மனித வாழ்க்கையில்லை. தேசம் மற்றும் சமுதாய ஏற்றமுமில்லை. உடலும்,  தேசமும்  சரி இல்லாவிடில் இறைவழிபாடும் நல்ல முறையில் நடைபெறாது. நல்ல உள்ளத்துடன் கைகொள்ளும் உழைப்பு கர்மயோகமே ஆகின்றது.  இறைவழிப்பாட்டிற்கும் துணை புரிகிறது.

          சோம்பல் என்பது மிகப்பெரிய எதிரி. அதை ஒழிக்காமல்  ஆத்ம சாதனையும்  ஆகாது, உலக சாதனையும் நடைபெறாது. ஆயிரக்கணக்கானோரை வருத்தி, தான் ஒருவன் கண்மூடி  அமர்வது சரியல்ல போன்ற பல வாதங்கள்.

          இவையனைத்தும் நல்ல அறிவுரைகளே. ஆயினும் பஜனை, ப்ரார்த்தனை, த்யானம் முதலியவை வீண். உடல் உழைப்பு ஒன்றே போதும், அதுவே இறைவழிபாடு எனும்  மட்டமான கருத்தை சிலர் கூறுகின்றனர். அது சரியல்ல.

        மனிதன் எந்த ஓர் வேலையையும் மேற் கொள்வது இன்ப நிலையை அடைவதற்கே. அனைத்து விதமான களைப்பையும் போக்கி ஓய்வெடுப்பதும், பரிசுத்தமும் பரிபூரணமுமான இன்ப நிலையை அடைவதும் தான் பஜனை, இறைவழிபாட்டின் நோக்கம். இவ்வாறான உயர்ந்த பயனை அடையும் வழி முறையை ஏளனம் செய்வது விவேகமல்ல. அச்சாதனைக்கு உகந்த சூழலில் வழி நடத்தி செல்பவர் ஆன்றோர்.